Wednesday, February 10, 2016

ஒரு பாட்டு... ஒரு பயணம்...

This is my attempt to write lyrics for a song. While I'm fleshing out the musical components, here's the lyrics that I thought should share on my blog.

பல்லவி:
ஒரு நினைவோடு எனை கோர்த்து இசை செய்தேன் மனதுக்குள்ளே
கனவுகள் யாவும் அதை தேடி பலவித பிம்பம் வளர்க்கிறதே

முகங்களும் கூட விரைந்தெனை பார்த்து கதைகளை கூறத் தொடங்கியதே
உறவென இல்லை மறப்பதும் இல்லை சில வரி சேர்த்து விலகியதே

சரணம் 1:
என் காதில் கேட்கும் ஓசையா?
பின்னாலே ஈர்க்கும் ஆசையா?
வேகம் குறைக்கும் நேசமா?
பறக்கத் துடிக்கும் மேகமா?

இன்னும் இன்னும் கொஞ்சம் கொஞ்சம்
வரிகள் எழுதி முடிக்கிறேன்
காற்றில் மிதக்கும் பொன் மேகமாய்
சுழன்று சுழன்று திரிகிறேன்

சரணம் 2:
சேர்க்கும் அடிகள் பயணமா?
விடுக்கும் பழக்கம் தோன்றுமா?
கலைந்த நிலையில் மயக்கமா?
மற்றொரு கனவின் தொடக்கமா?

மீண்டும்  மீண்டும் தட்ட தட்ட
கதவு மெல்ல திறக்குமே
வானம் கொஞ்சம் மண்ணில் வந்து
வழியைக் காட்டிக் கொடுக்குமே

Sunday, February 7, 2016

தராசு

வரையறைகள், சிறைப் பிடித்து சுயத்தை புதைக்கும் கட்டுகளாக இன்றி
நேசத்தை, ஒருங்கியக்கத்தை, வளர்க்கும் திட்டங்களாக மாறக் காத்திருக்கிறேன்

பெருவாரியாக ஒப்புக்கொள்ளப் பட்ட இயல்பு நிலை நியாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதல்ல
ஆரோக்கிய தளத்தில் மெல்லிய இசையோடு தனக்கென ஒரு நெறியோடு வாழ்ந்துவிட துடிக்கும் இதயங்கள் அதை அறியும்

இப்படி அரைக் கிறுக்காக ஊருக்கு ஒவ்வாத பிராணிகளாய் காட்சியளிக்கும் நம்மில் சிலர்
காத்திருப்பதென்னவோ, கலையை ரசிக்கும், நேர்மையை மதிக்கும் உள்ளுணர்வு கொண்ட தராசுகளுக்காகத்தான்.